Monday, October 10, 2011

நகுலனை முன்வைத்து கவிதையை அறிவது – எஸ்.ராமகிருஷ்ணன்


வான்கோவின் சுடர்த்த மஞ்சள் மலர் ஓவியம் கண்ட பார்வையாளர் ஒருவர் இது யதார்த்தமாயில்லையே எனக் கேட்க , அவருக்கு வான்கோ சொன்ன பதில் ” I paint my Reality “.


0


இந்த பதில் கவிதையை அறிவதற்கும் பயன்படுமென நினைக்கிறேன். கவி-வாசகன் இரு நிலைகளிலும் உங்கள் யதார்த்தமாக எதை கொள்கிறீர்கள் என்பதே முதன்மையாக படுகிறது. ஒரு கவிதையைப் புரிந்து கொள்ள முயற்சிப்பதன் வழி எதை அறிந்து கொள்கிறோம் . ஜப்பானிய மரபில் கவிதைகள் குளத்தில் எறியப்படும் கல் என சலனமற்ற பரப்பின் அமைதியை , சமன்குலைய செய்கிறது.புதிய உருவொளி தோற்றம் கொள்கிறது . தமிழ் கவிதை வாசிப்பு எதை நிகழ்த்துகிறது ?


பாப்லோ நெருடா கவிதையை ” Art of Raining ” என்கிறார் .மழை என்பது தொடர் நிகழ்வுதானே. கவிதையைப் பற்றிய இந்த மூன்று வார்த்தைகள் அதன் முழுமையும் நம்மை தீண்டச் செய்துவிடுகிறதல்லவா.


நான் கவிதைகளை மிகக் குறைவாக வாசிக்கும் பழக்கம் உடையவன் . கதையில் கூடும் லயிப்பு எனக்கு கவிதையில்
கூடுவதில்லை . ஆயினும் தொடர்ந்த கவிதை வாசிப்பு எனக்கு அதன் சில முகங்களைக் காட்டி உள்ளது . அதன்படி கவிதையில் மையம் மிதந்து கொண்டிருக்கிறது . ஒன்றுக்கு மேற்பட்ட மையங்கள் கூட இருக்கின்றன.கவிதை காலவெளிகளின் அரூப புள்ளிகளை , அதன் குறியீடுகளை முன்வைக்கிறது. கவிதையின் குரல் கவிஞனின் குரல் எனக்கொள்ள முடியாது. கவிதையில் உருவாகும் நான், நீ , உலகம் யாவும் தனித்த உருவங்களாக உருக்கொள்வதில்லை . கவித்துவபார்வை வெளியாகும் கவிதை தனியான ஒளி கொண்டிருக்கிறது என்பது போன்ற எண்ணங்கள் கடக்கின்றன.


ஞாபகத்தின் மணிக்கூண்டில் எதுவுமோ மோதி எழுப்பும் ஓசைதான் கவிதையா ? அல்லது பெருவெடிப்பு போல் நிகழ்வு சிதறி கவிதையாகிறதா ? இப்படி கவிதை பற்றி யோசிக்கும் போதே வார்த்தைகளின் தேர்ந்த செதுக்கல் ஒலியும் , திகைப்பும் , எளிமையும் படிமங்களும் கவியத்துவங்கி விடுகின்றன.


வாழ்வை பகுதியாக இல்லாமல் முற்றாக கவ்வ நினைக்கும் கவிஞன் , அதே தொழிலை பிறிதொரு பணிக்காக மேற்கொள்ளும் தத்துவஞானியிடம் தான் அதிக ஈர்ப்பு கொள்கிறான். எளிமையான தத்துவஞானியின் வாசகம் எப்போதும் கவிஞனை நோக்கி ஈர்க்கக் கூடியது. அதைப் போன்ற வாசகத்தை எழுதிவிடவே ஆசைகொள்கிறது கவிஞனின் மனது ” விழித்திருப்பவனுக்கு இரவு நீண்டது ” என்கிறார் புத்தர். இந்த வாசகத்தின் எளிமையை , பன்முகத்தை , அதன் கூர்மையை கொணரவே கவிஞனின் உணர்கொம்புகளும் காகிதத்தில் நகர்கின்றன. இந்த நூற்றாண்டின் முன்வரை தத்துவத்தின் நிழல்படாத கவியாக எவரும் தமிழில் உருவாகவேயில்லை . பாரதியோடு இதன் தொடர்ச்சி முடிவுபெறுகிறது எனலாமா ?


பிச்சமூர்த்தி , மயன் , டி.கே.துரைசாமி , பிரமிள் என மரபு அறிந்த கவிஞர் பலரும் நவீன கவிதையான புதுக்கவிதையின் தொடக்க காலத்தில் கவிதையை எழுத முயன்ற போது அவர்களுக்குத் தடையாக இருந்தது அவர்களின் தத்துவ அறிதலே.பிச்சமூர்த்தியிடம் தத்துவம் மறைபொருளாவதற்குப் பதிலாக, கவிதையே மறைபொருளாகிவிட்டது.மயன் கவிதையில் தத்துவம் மேல்பூச்சாகிவிட்டது. பிரமிள் மட்டும் இதில் விதிவிலக்கு.
ஆயினும் இவரது தீவிரவேட்கை கவிந்தவை சில கவிதைகளே.பின்னர் டி.கே.துரைசாமி எனும் நகுலன்


நகுலன் கவிதைகளை வாசித்த நண்பர் ஒருவர் சொன்னது
” இவர் கவிதை என்று வேறு எதற்கு தனியாக எழுதுகிறார் ? “


இக்குரலின் பின்னனியில் அவர் கண்டுகொண்ட ஏதோவொன்று ஒளிந்துள்ளது. இவர் எழுதுவதெல்லாம் கவிதைதானே , அல்லது கதை கவிதை என நகுலனை பிரிக்கமுடியுமா ? கவிதை , கதை இரண்டும் ஒரே உலகின் வேறு தோற்றம்தானா ? இப்படி இப்படியாக பிரிந்து கிளை சென்ற போதும் , நண்பரின் வாசகம் என்னுள் ஏற்படுத்திய சலங்களை முதன்மையாக கொண்டு செயல்பட்ட போது எனக்கும் தோன்றியது , டி.கே.துரைசாமி என்ற நகுலன்
அப்படித்தானா ?


அதிகம் எழுதுவதில்லை நகுலன்; எனினும் தொடர்ந்து எழுதிவருபவர் . இன்றைக்குள்ள கவிகளில் மரபு பாடல்களும் , நவீன கவிதைகளும் எழுதிய சிலரில் ஒருவர். வாசிப்பில் எளிமையும், புரியாமையும் ஒருங்கே கொண்ட கவிதைகள் இவரது தனிச்சிறப்பு என ஒருகுரல் எப்போதும்
கேட்டுவருகிறது . தத்துவ தீண்டல் அதிகம் என அறிவுஜீவிகளும் அபத்தவாதி என நவீனவாதிகளும் , குழப்பவாதி என இடதுசாரிகளும் சொல்லிவரும் இவரின் கோட் ஸ்டாண்ட் கவிதைகள் , சுருதி , இரு நெடுங்கவிதைகள் , மூன்று , ஐந்து ஆகிய கவிதைத் தொகுதிகளை வாசித்ததின் ஊடே நகுலன் வழி கவிதையை அறிதல் முனைப்பு கொண்டது.


எதைத்தான் கவிதை என்கிறார் நகுலன். அவரே சொல்வது போல எல்லாக் கவிதைகளும் ஒரு அனுபவ புணர்சிருஷ்டி ” . இந்த செயல்பாடு எங்கே நிகழ்கிறது. நகுலனின் கவிதைகள் ஞாபகம் எனும் அரங்கில் அனுபவங்கள் திரட்டப்பட்டு கோர்க்கப்பட்டு, தைத்து , படையலிடப்பட்டு அடுக்கி வைக்கப்படுகின்றன.காலம் வெளிச்சார்ந்து நடைபெறும் இந்த தொடர் செயலை புணர்சிருஷ்டி என சொல்லும் பிறிதொரு நிகழ்வு மூலம் காலவெளியின் அடுக்குகளை மாற்றியும் கலைத்தும் , தொடர்பற்றும் தன் விருப்பம் போல அடுக்கிக் கொள்கிறார் நகுலன்.


நகுலன் கவிதை முதல் வாசிப்பிலேயே சில விஷயங்கள்
தெரிந்துவிடுகின்றன . இவர் படிமங்களை வெகு அரிதாகவே
கையாளுகின்றார் . பிரக்ஞையின் மேல் கீழ் நிலைகளில்
தாவி அலைவுகொள்வது இவர் கவிதை . சப்த நிசப்த வார்த்தை பின்னலை மேற்கொள்கிறார் . பல்வேறு எழுத்தாளர்களின் வரிகள் இவர் கவிதையில் ஊடுகலந்து செல்கின்றன. எள்ளலும் தனிமையும் எதன்மீதோ கொள்ளும் தீராத தவிப்பும் எல்லா கவிதைகளிலும் வெளிப்படுகின்றன என்பது போல சில அனுமானங்கள் ஏற்படுகின்றன.


இந்த கணிப்பு சில வாசிப்பிற்குப் பிறகு தந்து படிக்கட்டுகளை கீழே விரித்துக் கொண்டே செல்கின்றன . அதன் வழி உருவானவை இந்த குறிப்புகள்


குறிப்பு 1 :


பெரும்பாலான தமிழ் கவிஞர்கள் கவிதையினை படிமத்தின் மீது கட்டும் போது நகுலன் இதை கவனமாக விலக்குகிறார். இதை Palin Poetry எனலாமா ? பிரமிள் , பசுவய்யா , தேவதச்சன் , கலாப்ரியா, பிரம்மராஜன் போன்றவர்களை தேர்ந்த படிமங்களைக் கையாண்டவர்கள்
என்றால் நகுலன் , ஆனந்த் , விக்ரமாதித்யன் போல அரிதான
படிமங்கள் தென்படும் கவிதைகளை Palin Poetry எனலாம்


தத்துவம் எப்போதும் உண்மையை நேரிடையாக ஸ்பரிசிக்கச் சொல்கிறது . உவமை , படிமம் எல்லாம் அதை அடையமுடியாத தடைகள் என்கிறது . Palin Poetry க்கும் தத்துவத்திற்கும் நேரிடை உறவு உள்ளதா ? இந்த மூன்று கவிஞர்களையும் பார்த்தால் அந்த உறவு வெளிப்படையாகவே தெரிந்துவிடுகிறது . நகுலன் அத்வைதத்தில் ஈர்ப்புக்கொண்டிருக்கிறார் . விக்ரமாதித்யன் சைவசித்தாந்தத்தில் , ஆனந்திடம் அத்வைதமும் பிறவும் என கலப்பு தெரிகிறது அல்லது அத்வைதத்தை வேறு பாஷையில் பேசுகிறார்.


நகுலன் இதன் வழி அத்வைத மார்க்கத்தினை நோக்கி செல்லவில்லை.மாறாக அத்வைதம் பேசும் இரட்டை நிலை மீது வசீகரம் கொள்கிறார்




வழக்கம் போல்
எனது அறையில்
நான் என்னுடன் இருந்தேன்
கதவு தட்டுகிற மாதிரி
கேட்டது
யார் ? என்று கேட்டேன்
நான் தான் சுசிலா
என்றாள்


இக்கவிதையில் வரும் நான் என்னுடன் இருந்தேன் எனும் வரி முக்கியமானது. இதில் நான் | என் | இந்த இருவர் யார் ? ஒருவர் தானா ? இல்லை இருநிலையா ? எதில் கவிஞன் சுருண்டு இருக்கிறார்.” என்னுடன்” என்பதில் தான் எனப்படுகிறது. இதே கவிதையின் கடைசி வரியான “நான் தான் சுசிலா” என்பதில் உள்ள நான்”,நான் என்னுடன் இருந்தேன் வரியில் வரும் நான் , இரண்டும் ஒன்று எனக்கொண்டால் சுசிலா இல்லாமல் போவது தெரிகிறது. இக்கவிதையில் வழக்கம் போல என்ற வார்த்தையை போடுவதின் வழி இதில் உருவாகும் திகைப்பு கலைக்கப்படுகிறது


குறிப்பு 2 :


எழுதும் செயலை மேற்கொள்ளும் நபர் பிரக்ஞை நிலையிலே இயங்க முடியாது, அதன் வெளிமட்டத்தில் மிதப்பதை விட அடிமட்டத்தில் ஆழ்ந்து கிடக்கவே விரும்புகிறான். இந்த உள்நோக்கிய பயணத்திற்கு நகுலன் கொள்ளும் சாதனங்கள் பிராந்தி குப்பிகள் மற்றும் புத்தகவாசிப்பு. இரண்டின் வழியிலும் பிரக்ஞை நிலையானது சரிவு கொள்வது தவிர்க்க முடியாதது. பிரக்ஞையின் அடிப்பரப்பிற்கு செல்லும் போது நகுலன் சொல்கிறார்.


என்னிடமிருந்தே
நான் வந்துகொண்டும்
போய்க்கொண்டிருக்கிறேன்


இந்த நிலையை ஆலீஸின் அற்புத உலகில் பூனையின் சிரிப்பை ஆலிஸ் அது வந்து கொண்டும் , மறைந்து கொண்டிருப்பதை காண்கிறாள். பூனை இருப்பதும் இல்லாததும் தெரிகிறது அவளுக்கு.நகுலனிடம் இந்த பூனையின் தன்மையே காணமுடிகிறது.


என் | நான் என இருநிலை போல உள் | வெளி என அதே பிறிதொரு நிலையும் நகுலன் பேசுகிறார்.


வீட்டிற்கு உள்
இருந்தோம்
வெளியே நல்ல மழை
ஒரு சொரூப நிலை


இந்த சொரூபநிலை என்ற இயல்பான மயங்கின நிலையை தான் புத்தகம், பிராந்தி இரண்டும் ஏற்படுத்துகின்றன. தனது பிரக்ஞையை மஞ்சள் பூனையென ஒரு கவிதை வரியில் குறிப்பிடுவதை நாம் கவனிக்க வேண்டும்


குறிப்பு 3 :


முதுமை வந்து கதவை தட்டும்போது , எஜமானர் வீட்டில் இல்லை வேலைக்காரனை அனுப்பி துரத்தி விட்டால் எத்தனை செளகரியமாயிருக்கும் என்கிறது ஜப்பானிய கவிதை. இதைப் போன்ற மனநிலை கொண்டவையே நகுலனின் மரணம் பற்றிய கவிதைகள் . மரணம் பற்றி தொடர்ந்து எழுதும் இவர் இதை நிகழ்வாகவே , துண்டித்தலாகவோ பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது . உடல் மீறிய செயல்பாடு என பார்ப்பதும்
வாழ்தல் | சாவு இரண்டும் எதிர்நிலையிலை ஒரே நிகழ்வின் இரட்டைக் களம் என கொள்வதும் புதிதாக உள்ளது.


ஒரு கட்டு வெற்றிலை , பாக்கு
சுண்ணாம்பு , புகையிலை
புட்டி பிராந்தி
நண்பா …
இந்த சாவிலும் ஒரு சுகம் உண்டு


என்ற வரியில் உள்ள சாவு நாம் அறிந்து வைத்திருக்கின்ற மரணமல்ல.


குறிப்பு : 4




சுசிலாவின் உயர்தன்மைகள்
சுசிலாவிடம் இல்லை


என பேசும் இவர் , கவிதையெங்கும் காணப்படும் சுசிலா எனும் பெண் பெயரைக் கொண்டு அதை பெண்ணாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை எனப்படுகிறது . இப் பெண்பெயர் உருவாக்கும் வார்த்தைச் சித்திரம் ஏற்கனவே உருவாகும் மனநிலையின் தீவிரத்திற்கு எதிர்நிலையாகவோ , சமன் செய்யும் ஒன்றாகவோ
பரிகசிக்கும் நிலையாகவோ கொள்ளலாம்.


ஒருவகையில் மரபுகவிதையில் வரும் வெண்சங்கே , பாம்பே, கிளியே , குதம்பாய் போல இதுவும் சுயஎள்ளல் குறியீடாக கொள்ளலாம் . சில இடங்களில் சுசிலா மூலம் ஏற்படுத்தும் நெருக்கம் பாரதியின் கண்ணம்மா என்ற வார்த்தை உருவின் செயல்பாடு போல தெரிகிறது.


0


என் குறிப்பு


மேற்காணும் கட்டுரை யாதுமாகி இதழில் (பிப்ரவரி – மார்ச் 1998) இடம் பெற்றதாகும் . இந்த இதழில் குறிப்புகள் 4 ஐத் தொடர்ந்து மேலும் சில குறிப்புகள் இருந்திருக்கலாம் . நான் வைத்திருக்கும் இதழில் இதனையடுத்த சில பக்கங்கள் எங்கோ தொலைந்துவிட்டன


Source : http://ilakkiyam.wordpress.com/

No comments:

Post a Comment