தொடர்ந்து சில வாரங்கள் ஜென் கவிதைகளாக வாசித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஜென் கவிதை குறித்து என் மனதில் தோன்றிய குறிப்புகள் இவை.
ஜென் கவிதைகள் இயற்கையை கடந்த காலத்தில் வைத்து பார்ப்பதில்லை. நாம் ஒரு மலையை அருவியை சந்திக்கும் போது இந்த கணம் என்ற மட்டுமே நம்மோடு இருக்கிறது. அருவிக்கு கடந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் யாவும் இக்கணமாகவே வெளிப்படுகிறது. அதை தான் ஜென் கவிதைகள் தன் கவிதைகாலமாக முன்வைக்கின்றன
கவிதையில் வரும் மலை தன் வருசத்தை இழக்கிறது. இயற்கையின் புராதன தன்மையை ஜென் கவிதை மாற்றுகிறது. நிசப்தம் மலையின் வடிவமாக சுட்டப்படுகிறது. மலை ஒரே செயலின் இயங்கா நிலையாகவும் மாறுகிறது. எனில் மலை என்பது வெறும் காண்பொருள் இல்லை
ஜென் கவிதைகள் எப்போதுமே அனுபவத்தின் முடிவின்மையை சுட்டுகிறது.
ஜென் கவிதைகள் தரும் மெய்தேடல் சுய அனுபவத்தை விட இயற்கையை தன் ஊடகமாக கொள்கிறது. ஜென் காட்டும் மேகம் ஆகாசத்தில் இல்லை. அது ஒரு நகர்வு. அது ஒரு தொடர் இயக்கம் அவ்வளவே. அறிவு தரும் நினைவுறுத்தலை ஜென் மறுக்கிறது. இதில் கடல் வானத்தில் இருக்கலாம். மலை தரையில் ஊர்ந்து போகலாம்.
ஜென் கவிதைகள் தரும் அனுபவம் பெரிதும் சுயநிகழ்வுகள் அற்றது. ஒருவகையில் அன்றாட நிகழ்வுகளின் சாரமாக உள்ள தன்னிருப்பு மற்றும் அது மாறும் தருணங்களை மட்டுமே பதிவு செய்கிறது.
ஜென் கவிதைகளை வாசிப்பதற்கு ஒவியங்களின் பரிச்சயம் அவசியம் என்று தோன்றுகிறது. ஒவியங்களை நுட்பமாக ரசிக்க தெரிந்தவனுக்கு ஜென் கவிதைகளின் ஆழம் எளிதில் புரிந்துவிடும்.
எளிய வாசகன் முன் உள்ள பிரச்சனை அவன் கவிதைகளை அதன் அர்த்தம் மற்றும் சமூக தொடர்பு சார்ந்து பெரிதும் வாசிப்பது. அவன் கவிதையை வழியாக அர்த்ததை உற்பத்தி செய்து கொள்ளவும் அதை பகிர்ந்து அளிக்கவுமே பெரிதும் முயற்சிக்கிறான்.
கவிதையோ சொற்களை அதன் பயன்பாட்டு தளத்திலிருந்து உயர்த்தியோ விலக்கியோ இன்னொரு பொருளை, இன்னொரு புரிதலை ஏற்படுத்த முயற்சிக்கின்றன.
உதாரணத்திற்கு தேவதச்சன் கவிதை ஒன்றில் மத்தியானம் என்ற சொல் மத் தியானம் என்று இரண்டாக பிரிக்கபட்டு பயன்படுத்தபடுகிறது. இந்த துண்டித்தல் இதுவரை நான் அறியாதபடி மத்தியானத்தின் நீண்ட தனிமையை அதன் ஆழ்நிலையை சொல்லின் வழியாகவே உணர வைக்கிறது.
இன்னொரு விதத்தில் கவிஞன் சொற்களை மிதக்கவிடுகிறான். அதன் நேரடி பொருள் மற்றும் பயன்பாட்டிலிருந்து அதை துண்டிக்கிறான். விளையாடுகிறான். பல நேரங்களில் சொல் தனித்த இருப்பு கொண்டுவிடுகிறது.
ஜென் கவிதைகளை வாசிப்பவனின் முன் உள்ள பிரச்சனைகள் கவிதை புரிகிறதா என்பது மட்டுமில்லை. ஏன் இயற்கை இவ்வளவு நெருக்கமாக நம் கண்முன்னே தோற்றம் தருகிறது என்பதே.
அன்றாட வாழ்வின் சிறு சிறு கணமும் ஏன் இத்தனை முக்கியத்துவம் கொண்டதாக மாறிவிடுகிறது. இயற்கையை பற்றிய அவனது முன் அனுபவங்கள் கலைய துவங்குவதும் தன்னிருப்பு குறித்து அவனாக அறிந்து கொள்ள துவங்குவதும் நடக்கிறது. அது அவனது கவிதை வாசிப்பு முறையை மட்டுமில்லை அவனை பற்றி அதுவரை அறிந்து வைத்திருந்த மனசட்டகத்தையே மாற்றி அமைக்க முயற்சிக்கிறது.
அதை ஏற்றுக் கொள்வதும் அனுபவம் கொள்வதும் எளிதானதில்லை. அதே நேரம் அது மிகப்பெரிய சவாலும் இல்லை. கவிதை வாசகன் ஜென் கவிதைகளின் முன்பாக தன் வயதை இழக்கிறான், தன்னை பற்றிய பொது பிம்பங்களை, கருத்தாக்கங்களை நழுவ விடுகிறான். இப்போது அவனுக்கும் அவன் அருகில் ஊர்ந்து கொண்டிருக்கும் சிறு எறும்பிற்கும் பேதமில்லை.
இரண்டும் உயிர்நிலையோடு இயங்கிக் கொண்டிருக்கின்றன. இரண்டிற்கும் உலகம் பிரம்மாண்டமானதாகயிருக்கின்றது. இரண்டும் உலகின் தீராத அன்றாட இயக்கத்தில் அலைந்தபடியே இருக்கின்றன.
இரண்டும் உயிர்நிலையோடு இயங்கிக் கொண்டிருக்கின்றன. இரண்டிற்கும் உலகம் பிரம்மாண்டமானதாகயிருக்கின்றது. இரண்டும் உலகின் தீராத அன்றாட இயக்கத்தில் அலைந்தபடியே இருக்கின்றன.
ஜென் கவிதைகள் அறிமுகப்படுத்தும் மலை, நிலவு, குளிர், காற்று, நிழல் எதுவும் நாம் முன் அறிந்தது அல்ல,மாறாக நாம் அறிந்த மலையை நிலவை அறிவு சார்ந்த பொருள் கொள்ளலில் இருந்து நீக்கி அதை கற்பனை கொள்ளவும் உயிர் இயக்கமாக அறியவும் செய்கின்றன. ஜென் கவிதைகளில் தான் மலைகள் நீந்துகின்றன. நிலவு படுக்கையில் துயில் கொள்கிறது. பாதைகள் கடந்து போக முடியாத தன் இருப்பு குறித்து வெளிப்படுத்துகின்றன.
ஜென் கவிதையில் வரும் நான் ஒரு பயணி.
பயணி என்றதும் ஊர் சுற்றுகின்றவன் என்று பொருள் கொண்டுவிடுவோம். அப்படியல்ல, இந்த பயணி முடிவற்ற தேடுதலின் வழியே தன்னை கண்டு கொள்கின்றவன் தண்ணீரை போல. அவனது பயணம் இயற்கையை கடந்து போவது அல்ல மாறாக இயற்கையினுள் போவது. வேப்பிலையின் மீது ஊர்ந்து செல்லும் பூச்சி ஒரே நேரத்தில் நடக்கவும் செய்கின்றது நடந்து செல்லும் இலையை தின்னவும் செய்கிறது. அப்படியான அனுபவமும் சில ஜென் கவிஞர்களிடம் காணமுடிகிறது.
பயணி என்றதும் ஊர் சுற்றுகின்றவன் என்று பொருள் கொண்டுவிடுவோம். அப்படியல்ல, இந்த பயணி முடிவற்ற தேடுதலின் வழியே தன்னை கண்டு கொள்கின்றவன் தண்ணீரை போல. அவனது பயணம் இயற்கையை கடந்து போவது அல்ல மாறாக இயற்கையினுள் போவது. வேப்பிலையின் மீது ஊர்ந்து செல்லும் பூச்சி ஒரே நேரத்தில் நடக்கவும் செய்கின்றது நடந்து செல்லும் இலையை தின்னவும் செய்கிறது. அப்படியான அனுபவமும் சில ஜென் கவிஞர்களிடம் காணமுடிகிறது.
அவன் உடைகளை களைந்து நீரில் இறங்குவதை போன்று தன்மீது இது வரை போர்த்தபட்ட சுயஅடையாளங்களை இயற்கையின் முன்பாக களைந்து நீந்த துவங்குகிறான். தண்ணீர் அவன் உடலை உள்வாங்கிக் கொள்வது போல எல்லையற்ற இயற்கையின் பெரும்பரப்பு அவனை உள்வாங்குகின்றது. தூய்மை சேர்கிறது. தாதியை போல அரவணைத்து கொள்கிறது. அப்போது அவன் நீருக்குள்ளும் நனையாத தன் உள்ளிருப்பை அறிகிறான். தன் உடல் நனைந்திருக்கிறதே அன்றி நனையாத இருப்பு ஒன்று தனக்குள் இருக்கின்றது என்பதை உணர்கிறான்.
பாறையின் மீது வழிந்தோடும் அருவி தண்ணீர் பாறையின் உட்புறத்தை ஒரு போதும் நனைக்க முடிவதில்லை என்பதைப் போல இயற்கையின் தீண்டுதலில் தன் புலன்கள் கொள்ளும் எழுச்சியை தாண்டி தீண்ட முடியாத அகத்தவிப்பும், விளங்க முடியாதுயரமும், முன்அறியாத சந்தோஷமும் உருவாவதை அறிகிறான்.
இரவெல்லாம் தூங்க முடியவில்லை என்னால்
என் படுக்கையில்
நிலவொளி கிடந்ததால்
நான் கேட்டுக் கொண்டேயிருந்தேன்
ஒரு அழைக்கும் குரலை
எங்கிருந்தோ
ஆம் என பதில் தரவேயில்லை எதுவும்.
என் படுக்கையில்
நிலவொளி கிடந்ததால்
நான் கேட்டுக் கொண்டேயிருந்தேன்
ஒரு அழைக்கும் குரலை
எங்கிருந்தோ
ஆம் என பதில் தரவேயில்லை எதுவும்.
கவி : ஸியி. நாடு சீனா. நாடோடி பாடல்
இந்த பாடலில் நிலவு முன் காணாத ஒரு நெகிழ்வு தன்மையும் உடனடியும் கொள்கிறது. அதே நேரம் நிலா வெறும் காண்பொருள் அல்ல. அது நம்மோடு கலந்துவிட்ட இயக்கமாக மாறுகிறது. கவிதையின் குரலான நான் நிலவை அனுமதிப்பதின் வழியே அவன் நித்யமான இயக்கத்திற்கு தன்னை மாற்றிக் கொள்கிறான்
இன்னொரு ஜென் கவிதை.
நான் நின்று போகவும் மாட்டேன்
பள்ளத்தாக்கின் சிற்றோடை முன்பாக
என் நிழல்
உலகினுள் பாய்ந்தோடி விடுமோ
என்ற பயத்தில்.
பள்ளத்தாக்கின் சிற்றோடை முன்பாக
என் நிழல்
உலகினுள் பாய்ந்தோடி விடுமோ
என்ற பயத்தில்.
இந்த கவிதையில் நிழல் பாய்ந்தோடி செல்கிறது என்ற குறிப்பு முன்வைக்கபடுகிறது. நிழல் குறித்த நமது பொதுபுத்தி அது நம்மை பின்தொடர்கிறது என்பது மட்டுமே, இந்த கவிதையில் வரும் நிழல் இயற்கையின் ஒரு பகுதி என்று சுட்டப்படுகிறது. அது பள்ளதாக்கின் சிற்றோடையை கண்டதும் ஒன்றிணைய பாய்கிறது,
வாழ்வின் அன்றாடஅனுபவங்களால் சலிப்புற்ற மனது இயற்கையை பிளாஸ்டிக் போல நினைத்து பழகுகிறது. அதிலிருந்து நம்மை விடுவித்து அருவியின் அடியில் ஒண்டி நிற்கும் தவளையின் வியப்பை போல இயற்கையை காண அனுமதிக்கிறது ஜென் கவிதைகள்.
இதற்காகவே அதை பலமுறை வாசிக்க வேண்டியிருக்கிறது.
No comments:
Post a Comment