Saturday, October 8, 2011

சிறு செடி


விரல் அளவே உள்ள சிறுசெடி ஒன்று என் முன்னால் நின்று கொண்டிருக்கிறது. காலையில் இருந்தே அதை பார்த்து கொண்டிருக்கிறேன்
மெலிந்த உடல். இரண்டே இலைகள்.பூக்கள் இல்லை. செடி தனியே அசைந்து கொண்டிருக்கிறது. சிறுசெடி தான் ஆனாலும் முழுமையாக இருக்கிறது. வெகுநேர்த்தியாக இருக்கிறது. தன்னை பற்றி நிறைய பெருமை கொண்டிருக்கிறதோ எனும்படியாக அதன் கம்பீரமிருக்கிறது. 
சிறுசெடியோடு எப்படி பேசுவது என்று எனக்குத் தெரியவில்லை. அதை கண்ணால் காண்பதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் நான் பேசவே விரும்புகிறேன். என் தனிமையை கடந்து செல்ல அதை துணைக்கு அழைக்கிறேன். அந்த செடி என்னை பார்த்து கொண்டிருக்கிறது. ஆனால் அது பேசவில்லை. பேசமறுக்கிறது என்று நான் எடுத்துகொள்கிறேன். அப்படியிருப்பது கூட பிடித்திருக்கவே செய்கிறது
உலகின் மிக முழுமையான சிறுசெடி ஒன்றின் முன்னால் உட்கார்ந்திருக்கிறேன் என்பது எத்தனை பெரிய விஷயம். இயற்கை எப்போதுமே கற்று தருகிறது. எல்லா வடிவத்திலும் நம்மை களிப்புற செய்கிறது.
இந்த செடியின் தனிமையை நினைத்து பாரக்கிறேன். அதை போன்ற வேறு செடிகள் எதுவும் அருகில் இல்லை. அந்தச் செடி பெரிய மரங்களை போல பறவைகளை தன்மீது அமர அனுமதித்தில்லை. வண்ணத்துபூச்சியோ, தட்டான்களோ கூட அதை தொட்டுபார்த்ததேயில்லை. மழையை கண்டு பயங்கொண்டதில்லை.வெயிலை பற்றி அக்கறை கொள்வதில்லை. எந்த பெரிய மிருகம் பற்றியும் அதற்கு அச்சமில்லை. அது பழம் தருவதில்லை. தன்னை பெரிதாக வெளிக்காட்டி எவரையும் கவர்வதில்லை. ஆனால் அது தனனிருப்பில் முழுமையாக இருக்கிறது. உலகின் பிரம்மாண்டங்கள் அத்தனையும் கேலி செய்தபடியே அது அசைகிறது.
சிறுசெடிகள் எதையோ முணுமுணுக்கின்றன. அந்த முணுமுணுப்பு நம் செவிகள் அறியாதவை. ஆனால் அவை அப்படி நடந்து கொள்வதற்கு காரணமிருக்கின்றன.
என்னை போலவே அந்த சிறுசெடியை ஒரு காகமும் பார்த்து கொண்டிருக்கிறது. காகம் சப்தமிடுகிறது. செடியின் தலை திரும்புகிறது. பறப்பதை பெரிய விசயமாக நினைத்து கொள்ள வேண்டாது என்பது போன்று அது காகத்தை பார்க்கிறது. 
அதோ மூன்று குருவிகள் காய்ந்த புல்வெளியில் எதையோ தேடுகின்றன. அதன் வால் துடித்துக் கொண்டேயிருக்கிறது. பாறையை அலகால் உரசுகின்றன. தூரத்து பேச்சு சப்தம் கேட்டு பறப்பதா வேண்டாமா என்ற குழப்த்துடன் திடுக்கிடுகின்றன.
நேற்று பார்த்த எறும்பின் அண்ணனோ, தம்பியோ ஒன்று இன்று என்னை அடையாளம் கண்டு கொண்டது போல சாவகாசமாக கடந்து போகிறது

சிறுசெடிகளின் இருப்பு தான் உலகின் பேரதிசயம் என்று தோன்றுகிறது. உலகம் தன்னை சமனப்படுத்திக் கொள்கிறது. அதன் தட்டில் எந்த பக்கமும் உயர்வதில்லை. சமமாக இருக்கிறது
சிறுசெடியின் இலைகள் கச்சிதமானவை. அவற்றை செய்த இயற்கையின் கைகள் நுட்பமானவை. அதை போல இன்னொன்றை அது செய்வதேயில்லை. நகல் என்பதே இயற்கையில் இல்லை.
சிறுசெடிகள் துயரமானவையா? தெரியவில்லை.
சிறுசெடிகளே நமக்கு நெருக்கமாக இருக்கின்றன. எளிய, எந்த அதிசயமும் இல்லாத நம்மை நினைவுபடுத்துகின்றன. உலகில் உள்ள கோடான கோடி மரங்களை விடவும் சிறுசெடிகளே அதிகமிருக்கின்றன. அதை நாம் கவனம் கொள்வதேயில்லை.
என் ப்ரியத்துக்குரிய சிறுசெடியே . காலை வணக்கங்கள். 
சிறுசெடியின் சிற்றிலையே.. நீ தொட்டு தடவ முடியாதபடி ஒடுங்கியிருக்கிறாய்
சிறுசெடியே உனக்கு சொற்களின் துணை தேவையில்லை.
நான் சொற்களால் மட்டுமே உன்னை அறிந்து கொண்டிருக்கிறேன்
நீ அசைகிறாய். பாடுகிறாய். ஆடுகிறாய்
முடிவின்மையின் பாடலை உன் உதடுகள் முணுமுணுக்கின்றன.
பால்யவயதின் நினைவு ஒன்றை போல தூய்மையுடன், ப்ரகாசமாக நீ இருக்கிறாய்
சிறுசெடியே நீ ஒரு தியானி. நீ ஒரு புன்னகை. ஒரு கனவு.
உன் கண்கள் எதையோ கண்டு தானே மூடிக் கொள்கிறது.
நான் அதை கவனிப்பதை கூட நீ விரும்பவில்லை.
பெயரில்லாத சிறுசெடியே 
காலைவெளிச்சம் வந்தபிறகும் மறையாத நட்சத்திரம் போல நீ தனித்திருக்கிறாய்
உன்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது
அப்படி சொல்ல கூச்சமாகவே இருக்கிறது
உன்னை வணங்குகிறேன். எழுத்தில் அடங்க மறுக்கும் உன்னை நட்பு கொள்ள விரும்புகிறேன்
   
 கானகத் தனிமை : சில குறிப்புகள்
 பொதிகைமலை பிப்ரவரி 14.2010.
Source :  
http://www.sramakrishnan.com/?p=644

No comments:

Post a Comment