Sunday, April 3, 2016

Movie : Oba Nathuwa Oba Ekka ( With You, Without You / Piragu )











கேளிக்கையும், நகைச்சுவையும், பொருளற்ற வன்முறையும் மட்டுமே, உணர்ச்சி பொங்க கொந்தளிப்பது மட்டுமே சினிமா அல்ல என்பதை, இந்த மாதிரியான படங்களை பார்த்தாவது தமிழ் திரைப்பட கலைஞர்கள் உணர வேண்டும். தமிழ் மக்களின் வலியை கூட வேறு மொழி பேசும் ஒரு கலைஞனால்தான் பதிவு செய்ய முடிகிறது. - Muruganandam Puvi
Director Prasanna Vithanage talks with KCTS 9 producer Laila Kazmi about Sri Lankan cinema.
Reconciliation is one of the underlying themes of Vithanage’s most recent and beautifully composed feature film, With You, Without You, which has screened at film festivals around the world.
“I felt that [post-war] reconciliation was not happening fast enough and without it we could not survive [as a country],” says Vithanage. With You, Without You tells the story of a Tamil woman and a Singhalese man. Set in a small town right after the end of the civil war, it is a love story burdened by the physical and emotional devastation of war.
The other main theme of the film is masculinity. “I was approached by Rahul Roy, a documentary filmmaker from India, and he asked me to do a film on masculinity,” says Vithanage. He based his story on Fyodor Dostoyevsky’s short story A Gentle Creature, which Vithanage feels offers a “vivid picture of the effect of the masculinity and how, because of the masculinity, we could lose the most important things in life: the love, and life itself.”
Shyam Fernando plays Sarathsiri in 'With You, Without You.' Photo courtesy of Prasanna Vithanage.
One of the characteristics of Vithanage's films is the color choices, which, along with the evocative compositions, play as important a role in his films as the characters themselves. In With You, Without You, characters appear as if they are moving inside a beautifully composed painting with vivid colors in nearly each frame.
Vithanage gives due credit to his collaborator, the accomplished cinematographer M.D. Mahindapala. “I pass the script to him and then [our] process begins of how to build the world of these characters and what is the color of that world.”
On Working With Actors
“I love actors and I love good acting,” says Vithanage. “Without them, as directors, we cannot bring [out] the humanity of the characters.”
For Vithanage, casting the right actor is essential to getting a good performance. “Then, I work with them a lot before shooting, finding out what is the innermost truth of [their] characters.”
On screen, these truths are revealed often with little dialogue, mostly through characters’ interactions and facial expressions. “In real life, we may say a lot of things but our faces, our eyes, will not lie, so the filmmakers job is to capture that,” says Vithanage.
Oba Nathuwa Oba Ekka ( With You, Without You / Piragu )

Wednesday, February 17, 2016

குழந்தைகள் விரும்பும் பள்ளிகள் எப்படி இருக்க வேண்டும்...?

ன்று வேண்டா வெறுப்பாகத்தான் அந்த பள்ளிக்கு சென்றேன். மரங்கள் சூழ, லாரி பேக்கர் ( உலகம் கொண்டாடும் கட்டட கலைஞர் ) கட்டட அமைப்பில் கட்டப்பட்டிருந்த, குழந்தைகள் முகத்தில் எந்த வெறுப்பும் இல்லாமல் சந்தோஷமாக பட்டாம்பூச்சியை துரத்தி சென்று கொண்டிருந்த அந்த பள்ளிக்கு நான் அன்று வேண்டா வெறுப்பாகத்தான் சென்றேன்.

 
தருமபுரி மாவட்டத்தின் முன்னாள் தொடக்க கல்வி அலுவலர், அலுவல் நிமித்தமாக தருமபுரி மாவட்டத்தில் காடுகள் சூழ இருக்கும் நாகர்கூடல் கிராமத்தில் உள்ள ஒரு பள்ளிக்கு சென்றதாகவும், அந்த பள்ளி பயிற்றுவிக்கும் முறை, கட்டட அமைப்பு வித்தியாசமாக இருந்ததாகவும், முக்கியமான அந்த பள்ளியின் தாளாளர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் என்றும், நான் அந்த பள்ளியை ஒரு முறையேனும் நேரில் பார்வையிட வேண்டும் என்றும் அவர் சொல்லிய போது, எந்த சுவாரஸ்யமும் இல்லாமல், நான் வேண்டா வெறுப்பாகத்தான் அந்த பள்ளிக்கு சென்றேன்.

அரசின் பங்களிப்பில்லாமல் இயங்கும் பள்ளிகள் அனைத்தும், பெரும்பாலும் பணத்தை நோக்கமாக கொண்டது என்பது என் தனிப்பட்ட நம்பிக்கை. அதனால்தான் அந்த பள்ளிக்கு வேண்டா வெறுப்பாக சென்றேன். மாணவர்கள் மற்றும் தாளாளருடான அந்த நெடிய  உரையாடல் அந்த எண்ணத்தை மாற்றியது. நாம் பார்க்காவிட்டாலும், அங்கொன்றும், இங்கொன்றுமாக மாற்றம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை புரிய வைத்தது.

இவ்வளவு தீமைகளுக்கு பின்பும் இவ்வுலகம் எப்படி இயங்கி கொண்டிருக்கிறது என்று என்னுள் அவ்வப்போது எழும் கேள்விக்கு... ‘இன்னும் இவர்களால்தான் இவ்வுலகம் சிறிதேனும் அறத்துடன் இயங்கி கொண்டிருக்கிறது' என்று புரிய வைத்தது...’

பீடிகை போதும், வாருங்கள் பள்ளிக்கு போவோம்...
அந்த பள்ளியில் நான் இருந்த சில மணி நேரங்களில் பெற்ற அனுபவத்தை, அடைந்த பரவசத்தை, உங்களுக்கு அப்படியே கடத்தும் சொல் ஆளுமை எனக்கில்லை. இருந்தாலும் முயல்கிறேன்...
புவிதம் - காட்டுப் பள்ளி:

புவிதம், இது அந்த பள்ளியின் பெயர். ஏன் புவிதம்...? அதை பின்பு காண்போம். நான் ஏன் அதை காட்டுப் பள்ளி என்கிறேன்...? நிச்சயம் அது காடுகள் சூழ இருப்பதால் மட்டும் அல்ல. காடுகளில் எப்படி மரங்கள் அதன் இயல்பில் வளருமோ, அது போல்தான் இங்கும் குழந்தைகள் அதன் இயல்பில் வளர்கிறார்கள். குழந்தைகள் மீது எந்த ரசாயனங்களும் தெளிக்கப்படுவதில்லை (ரசாயனங்கள் என்று நான் குறிப்பிடுவது, நம் விருப்பங்கள், பணம் சார்ந்து நமக்குள் இருக்கும் மதிப்பீடுகள், சக மனிதனை போட்டியாளராக கருத வைக்கும் நம் கருத்துகள்). இவை எதுவும் அங்கு மாணவர்கள் மீது திணிக்கப்படுவதில்லை. அதனால்தான் அதை காட்டு பள்ளி என்கிறேன்.

நான் அந்த பள்ளிக்கு சென்றது ஒரு வெண்மேகம், தன் ஒளிக்கீற்றை பரப்பிய ஒரு காலை வேளையில். குழந்தைகள், கைகளில் குடம், களை கொத்தியுடன் பரபரப்பாக அங்கு இங்கும் சென்று கொண்டிருந்தார்கள். “பசங்களா... எங்கடா போறீங்க... ?” என்று ஒரு மாணவனை இடைமறித்து கேட்டபோது, “அண்ணா.... நாங்க பள்ளி தோட்டத்தில காய்கறிகள் விதைத்து இருக்கோம்னா... அதுக்கு தண்ணி ஊத்தப் போறோம்...?” என்று சொல்லிவிட்டு குடுகுடுவென ஓடினான்.

அவனை பின் தொடர்ந்து சென்றபோது, மாணவர்கள் பள்ளியின் பின் புறம் உண்டாக்கி உள்ள காய்கறி வனத்தை அடைந்தேன். முதிர்ந்த விவசாயிகள் போல், ஒரு ஒருங்கிணைந்த பண்ணையையே அந்த மாணவர்கள் உண்டாக்கி இருந்தார்கள்.

அவர்களுடன் பேச்சு கொடுத்தேன்.
“அண்ணா... நாங்க கீரை, உருளைக் கிழங்கு, சுரைக்காய், பீர்க்கை எல்லாம் போட்டு இருக்கோம்னா.... எட்டாவது படிக்கிற அண்ணன் எல்லாம் சேர்ந்து, சோளம் போட்டு இருக்காங்க...” என்றாள் நான்காம் வகுப்பு படிக்கும் தமிழ்ச்செல்வி.
பள்ளி மணி ஒலிக்கிறது. மாணவர்கள் உற்சாகமாக கை கால்களை கழுவிவிட்டு வகுப்பிற்கு செல்கிறார்கள்.

“மிஸ்... கிளாசுக்குள் வேண்டாம்... இன்னைக்கு மரத்தடியில் வகுப்பெடுங்க...” என்கிறான் ஐந்தாம் வகுப்பு மாணவன். மற்ற மாணவர்கள் எல்லாம் அவனை வழிமொழிகிறார்கள். அன்றைய வகுப்பு மர நிழலில் நடக்கிறது. அதே வகுப்பை சேர்ந்த இன்னொரு மாணவன், “மிஸ் எனக்கு இன்னைக்கு ரொம்ப சலிப்பா இருக்கு... நான் ஓவியம் வரையட்டுமா..” என்கிறான். அவனை அந்த ஆசிரியர் அனுமதிக்கிறார்.

மாணவர்கள் எந்த தயக்கமும் இல்லாமல் சரளமாக ஆங்கிலம் பேசுகிறார்கள். இப்படியாகதான் இருக்கிறது புவிதம் பள்ளி.

அமைதிக்கான ஒரு தேடல்...

உங்களுக்கு அந்த பள்ளியின் தாளாளர் மீனாட்சியை பற்றி கூறிவிடுகிறேன். அப்போதுதான், அந்த பள்ளியை பற்றி புரிந்து கொள்ள சுலபமாக இருக்கும்.

மீனாட்சி,  உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர். புனேவில் கட்டடக்கலை படித்தவர். உலகம் கொண்டாடும் கட்டட கலை கலைஞரான லாரி பேக்கரின் நேரடி மாணவர். புனேவில் நிலவும் சமூக ஏற்றத்தாழ்வுகளால் மனம் வாடி, அமைதியை தேடி 1992-ம் ஆண்டு தமிழகம் வந்தவர். தான் விரும்பும் அமைதியான இயற்கையுடன் இயைந்த வாழ்க்கை, கிராமங்களில்தான் இருக்கிறது என்று உணர்ந்து தருமபுரி மாவட்டம், நாகர் கூடல் பகுதியில் கணவர் உமேசுடன் குடியேறியவர்.
'நாம் பள்ளிகளில் வன்முறையை பயிற்றுவிக்கிறோம்...'

இனி, மீனாட்சியுடனான உரையாடல்...

உங்களுடன் பேச நிறைய இருக்கிறது. முதலில், உங்கள் பள்ளியின் பெயரில் இருந்தே தொடங்குகிறேன். ஏன் பள்ளிக்கு புவிதம் என்று பெயர்...?

"நாங்கள் நேரத்திற்கு பின்னால் ஓடுவதில்லை. நாம் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம்" என்று சோளக்கூழைத் தந்துவிட்டு பேச துவங்குகிறார். "நான் இந்த புவிக்கு சுமையாக இருக்க கூடாது, அதனுடன் இயைந்து வாழ வேண்டும் என்று விரும்புபவள். அதனால்தான் பள்ளிக்கு அப்படியொரு பெயர் வைத்தேன்."

புரியவில்லையே...?

"புவிதம் = புவி + இதம். அதாவது புவிக்கு இதமாக இருப்பது. எங்கள் பள்ளி அப்படிதான் இயங்குகிறது."

தமிழை தாய் மொழியாக கொண்டிருக்கும் எங்களுக்கே, தமிழ் தகராறாக இருக்கிறது. ஆனால், ஹிந்தியை தாய் மொழியாக கொண்ட உங்கள் மொழி அறிவு வியக்க வைக்கிறதே...?

"அப்படியெல்லாம் இல்லை. நான் தமிழகம் வந்து ஏறத்தாழ 25 ஆண்டுகள் ஆகப்போகிறது. ஆனால், நான் இன்னும் தமிழ் மாணவிதான். இன்னும் தமிழ் பயின்று கொண்டுதான் இருக்கிறேன்."

சரி. மீண்டும் விஷயத்திற்கு வருவோம். மறைமுகமாக இல்லாமல் நேரடியாக கேட்கிறேன். நீங்கள் பள்ளி துவங்கியதற்கான நோக்கம் என்ன...? நீங்கள் மாணவர்களிடமிருந்து கட்டணமும் வாங்குவது இல்லை என்று அறிகிறேன்... கல்வி பணம் ஆகிவிட்ட சூழலில், உங்கள் நோக்கம்தான் என்ன...? 
"இந்த பள்ளி என் சுயநலத்தின் நீட்சி. இங்கு குடிபெயர்ந்தவுடன், என் வீட்டில் இந்த கிராம குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் டியூசன் எடுக்க துவங்கினேன். எங்கள் மகள் கயாவும் வளரத் தொடங்கினாள். குழந்தைகள் மீது வன்முறையை திணிக்கும் பள்ளிகளில் என் மகளை சேர்க்க விருப்பமில்லை. அதே நேரம் மாலை நேரத்தில் என்னிடம் பயிலும் மாணவர்களும், முழு நேரமாக இங்கு படிக்க விரும்பினார்கள். என் மகளுக்காகவும், அந்த குழந்தைகளுக்காகவும்தான் இந்த பள்ளியை துவங்கினேன்."

'வன்முறையை திணிக்கும் பள்ளிகள்’. நீங்கள் வன்முறை என்று எதனை குறிப்பிடுகிறீர்கள்...?


"ஆம். வன்முறைதான். குழந்தைகள் அனைவரும் எட்டு மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருக்க வேண்டும் என்று நினைப்பது, அவர்களை அமர்ந்திருக்க வைப்பது வன்முறை இல்லையா...?. அவர்கள் எவ்வளவு இறுக்கமாக இருப்பார்கள், அதை நீங்கள் உணரவில்லையா... சரி.. மற்றவர்களை விடுங்கள்... நீங்கள் எவ்வளவு இறுக்கமாக இருந்திருப்பீர்கள்...? இந்த இறுக்கம் அவர்கள் சுயமாக சிந்திப்பதை தடுக்கிறது. அவர்கள் சுயத்தை அழிக்கிறது. அவர்கள் தன்னம்பிக்கையை சிதைக்கிறது. அதே நேரத்தில் இன்னொரு விஷயத்தையும் சொல்லிவிட வேண்டும். ஒப்பீட்டளவில், அரசாங்க பள்ளிகள் மிகவும் சுதந்திரமானது. அங்கு பயிலும் மாணவர்கள்தான் அதிக தன்னம்பிக்கை உடையவராக காணப்படுகிறார்கள்."

பள்ளிகள் மாறவேண்டும் என்கிறீர்கள். ஆனால், பாடத்திட்டமே மோசமாகதானே இருக்கிறது...? 

"சமச்சீர் கல்வி எவ்வளவோ பரவாயில்லை. அது மாணவர்களை சிந்திக்க தூண்டுகிறது. அதிலும் பிரச்னைகள் இல்லாமல் இல்லை. ஆனால், நாங்கள் பயிற்றுவிக்கும் முறை மூலம் அதை இலகுவாக்குகிறோம். அதாவது சிறு கதைகள், பாடல்களை நாங்களே உண்டாக்குகிறோம். அதில் பாடத்திட்டத்தில் உள்ள விஷயங்களை கொண்டு வருகிறோம். அது கற்றலை சுலபமாக்குகிறது.

மேலும், இங்கு Ranking முறை இல்லை... இங்கு நடக்கும் தேர்வானது, மாணவர்களின் அறியாமையை அளக்கும் அளவுகோலாக இருப்பதில்லை; மாணவர்களை சிந்திக்க தூண்டுவதாக இருக்கிறது. இங்கு bilingual ஆக தமிழிலும், ஆங்கிலத்திலும் பாடம் நடத்துகிறோம். அதனால் அவர்கள் மொழி அறிவும் சிறப்பாக இருக்கிறது.

அதே நேரம், உங்களுக்கு இன்னொரு விஷயத்தையும் சொல்லிவிடுகிறேன். மாற்றத்தை விரும்பும் நாங்கள் சிறு குழு. எங்களுக்கென்று சில வரம்புகள் உண்டு. அதில்தான் நாங்கள் வேலை செய்ய முடியும்."
எனக்கு நன்றாக புரிகிறது. சரி, பெற்றோர்களின் ஆதரவு எப்படி இருக்கிறது. அவர்கள், தங்கள் பிள்ளைகளை பள்ளியில் தோட்ட வேலை செய்ய எப்படி அனுமதிக்கிறார்கள்...?

"பெற்றோர்களின் மனநிலையும் நிச்சயம் மாற வேண்டும். சிலர், பள்ளி என்பதை பாடத்திட்டத்தை கற்பிக்கும் இடமாக மட்டும்தான் பார்க்கிறார்கள். எங்களை பொறுத்தவரை பள்ளி என்பது வாழ்வியலை பயிற்றுவிக்கும் இடம். மாணவர்கள் விவசாயத்தையும் கற்க வேண்டும். அப்போதுதான் நாளை அவர்கள் அரசு அதிகாரிகளாக அல்லது அரசு கொள்கைகளை வடிவமைக்கும் இடத்திற்கு செல்லும்போது, மக்களின் பிரச்னைகளை புரிந்து கொண்டு கொள்கைகளை வடிவமைப்பார்கள். நாங்கள் விவசாயம் மட்டும் சொல்லித் தரவில்லை, நெசவு தொழில், கட்டடக் கலையையும் சொல்லிக் கொடுக்கிறோம்.அதாவது மாணவர்கள் சுயச்சார்புடன் இருக்க பயிற்றுவிக்கிறோம்.

மேலும், இங்கு உற்பத்தி செய்யப்படும் காய்கறிகளை அவர்களுக்கு மதிய நேரத்தில் வேக வைத்து தருகிறோம். ரசாயனம் இல்லாமல் இயற்கை முறையில் அவர்களே வளர்த்த காய்கறிகளை அவர்கள் உண்ணுகிறார்கள்."

ஹூம். கட்டட கலை என்றவுடன்தான் நினைவிற்கு வருகிறது, பள்ளிகளின் கட்டடம் வித்தியாசமாக உள்ளதே...?

"லாரி பேக்கர் முறையில் கட்டப்பட்ட கட்டடங்கள் இவை. அதாவது, மாணவர்களுக்கு இயற்கையை சுரண்டக் கூடாது என்று நாம் கற்று தரும்போது, அவர்களின் சூழலும் அது மாதிரிதானே இருக்க வேண்டும். இந்த கட்டடங்களில் அதிக அளவில் சிமெண்ட் பயன்படுத்தப்படவில்லை. இயற்கையை சுரண்டி கட்டவில்லை. இந்த இடத்தில் என்ன பொருள் கிடைக்கிறதோ, அதை கொண்டு கட்டி உள்ளோம். மேலும், பகலில் இந்த கட்டடங்களில் தேவையான அளவிற்கு வெளிச்சமும், காற்றும் இருக்கும். அதனால், மின்விசிறியும், விளக்கும் தேவையில்லை. குழந்தைகளிடம், அணு உலையால், அனல் மின் நிலையத்தால் சூழல் கேடு என்று பயிற்றுவிக்கும் முன், மின்சாரத்தை விரயமாக்காமல் இருக்கவும் சொல்லிக் கொடுக்க வேண்டும்."

நீங்கள் புனேவில் சமூக ஏற்றத்தாழ்வுகள் பொறுக்காமல் தமிழகம் வந்தீர்கள். உங்கள் மாணவர்களிடம் அந்த சமூக ஏற்றத்தாழ்வுகள் குறித்து பேசி உள்ளீர்களா...?

"நிச்சயமாக. அனைவரையும் சமமாக மதிக்க கற்றுத் தருகிறோம். பணம் மட்டுமே பிரதானம் இல்லை என்கிறோம். இந்த புவி நமக்கு மட்டுமானது இல்லை, அனைத்து ஜீவராசிகளுக்குமானது என்று சொல்லி தருகிறோம். இதையெல்லாம் வெறும் வார்த்தைகளில் மட்டும் சொல்லி தராமல், அது போல் வாழவும் பயிற்றுவிக்கிறோம்."

எல்லாம் மிகவும் சிறப்பாக உள்ளது. ஆனால், உங்கள் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரைதான் உள்ளது. மேல் படிப்பிற்கு மீண்டும் வழக்கமான பள்ளிகளுக்குதான் செல்ல வேண்டும். அதை எப்படி உங்கள் மாணவர்கள் எதிர் கொள்கிறார்கள்...? 

"ஆம். ஆனால் நான் முன்பே கூறியது போல், எங்களால் எல்லாவற்றையும் மாற்ற முடியாது. வழக்கமான பள்ளிகளுக்கு இங்கிருந்து செல்லும் மாணவர்கள், அதில் தங்களை பொறுத்திக் கொள்ள சில காலம் எடுக்கிறது. ஆனால், அடித்தளம் சிறப்பாக உள்ளதால் அதிலும் நல்ல மதிப்பெண்களையே எடுக்கிறார்கள். புரிந்து கொண்டு பயில்கிறார்கள்." என்று சொன்ன மீனாட்சி,  பேட்டியின் முடிவில் ஒரு விஷயத்தை சொன்னார். அதுவே இந்த கட்டுரைக்கும் சிறந்த முடிவுரையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

“மனிதர்கள் தங்கள் வாழ்வின் முக்கியமான ஒரு பெரும் பகுதியை பள்ளிகளில் கழிக்கிறார்கள். அதனால், அந்த இடம் அவர்களுக்கு பிடித்தமான இடமாக இருக்க வேண்டும். அவர்கள் விரும்பி கற்க வேண்டும். இறுக்கமான சூழல் இருக்க கூடாது. நாம் மோசமான முறையில் அவர்கள் மீது ஒன்றை திணிக்கும் போது, மோசமான ஒன்றைதான் அறுவடை செய்ய முடியும். நாம் அன்பையும், அறத்தையும் நல்ல சூழலில் விதைத்தால், இந்த பிரபஞ்சம் பூக்களால் நிறையும்.”

ஆம். புவிதம் முழுவதும் பூக்கள் பூத்து குலுங்குகிறது.

- மு.நியாஸ் அகமது

http://www.vikatan.com/news/coverstory/59324-this-is-what-school-should-be-like.art