Monday, April 9, 2012

’மிர்தாதின் புத்தகம்’


"How much more infinite a sea is man? Be not so childish as to measure him from head to foot and think you have found his borders." — Mikhail Naimy 


'உலகில் கோடிக்கணக்கான புத்தகங்கள் உள்ளன.ஆனால் இன்றுள்ள எல்லாப் புத்தகங்களை விடவும் மேலோங்கி உயர்ந்து நிற்பது ’மிர்தாதின் புத்தகம்’. இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகமிது... மிகுந்த தனிச்சிறப்புக் கொண்டது. நீண்ட நெடிய காலத்திற்குப் பிறகு, மாபெரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள, மிகச் சிறந்த நூல் இது.பல்லாயிரம் முறை படிக்க வேண்டிய தகுதி படைத்த புத்தகம்.நைமி, இந்த நூற்றாண்டின் மாபெரும் எழுத்தாளர் மட்டுமல்லர், எல்லா நூற்றாண்டுகளிலும் இவரே மாபெரும் எழுத்தாளர்.நான் ஆயிரக்கணக்கான நூல்கள் படித்திருக்கிறேன், எதுவுமே இதற்கு ஈடாகாது’ - ஓஷோ

98 வயது வரை வாழ்ந்து 99 புத்தகங்கள் எழுதிய, கலீல் கிப்ரானின் உயிர் தோழனாக விளங்கிய, மிகைல் நைமியின் அற்புதப் படைப்பே 'மிர்தாதின் புத்தகம்’.இதை புத்தகம் என்று சொல்வதைவிட மனித மனதின் ஆழ் நோக்கிய பயணம் என்று சொல்வதே பொருத்தம்.தனது புத்தகத்தைப் பற்றி அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

’வெற்றி பெறும் ஏக்கம் கொண்டவர்களுக்கு இது, ஒரு கலங்கரை விளக்கமும், ஒரு கடற்கரையும் ஆகும்.மற்ற அனைவருக்கும் இது ஓர் எச்சரிக்கை’

இதில் நைமி குறிப்பிடுவது புறவுலக வெற்றியை அல்ல.ஞானத்தின் பால் ஏக்கம் கொண்டவர்களையே அவ்வாறு குறிப்பிடுகிறார்.ஒரு கதையைப் போல் ஆரம்பிக்கும் புத்தகம், மிர்தாத் பேச ஆரம்பித்தவுடன் சட்டென்று ஒரு அபாயகரமான ஆழத்திற்குள் பாய்கிறது.அதன் பிறகு பிடித்துக்கொள்ள எதுவுமின்றி விண்வெளியில் பறப்பதைப் போன்ற உணர்வுதான் புத்தகத்தை முடித்து மூடும் வரையிலும் ஏற்படுகிறது.இதை மற்ற புத்தகங்கள் போல் சாதாரணமாக படித்தவுடன் புரிந்துகொள்ள முடியாது.ஏனென்றால் அதன் அர்த்தங்கள் வார்த்தைகளில் இல்லை.அதனால் தியானத்தை பற்றியோ, சிறிதளவேனும் ஆன்மிக சிந்தையோ (ஆன்மிகம் என்று நான் இங்கு குறிப்பிடுவது மதம் சார்ந்ததல்ல) உள்ளவர்களால் மட்டுமே புரிந்துகொள்ளமுடியும்.மற்றவர்களுக்கு இது மிகப் பெரிய மொக்கையாகக் கூட தோன்றலாம்.அதனால் தான் நைமி முதலிலேயே எச்சரிக்கை விடுக்கிறார்.இந்தப் புத்தகத்தின் சிறப்பு என்னவெனில் அதை படிப்பவரின் பக்குவத்திற்கேற்ப பொருள் மாறுபடும்.அதனால் இதைத்தான் சொல்ல வருகிறார் என்று யாராலும் அறுதியிட்டு கூறுவது கடினம்.

பலிபீடச் சிகரத்தில் உள்ள பாழடைந்த மண்டபத்தில் ஒரு துறவி உலவுவதாக மலைவாழ் மக்கள் சொல்வதைக் கேட்ட ஒருவன், செங்குத்தான மலைப் பாதையில் அவரைக்காண ஏறுகிறான்.கிராம மக்கள் எவ்வளவோ எச்சரித்தும் அவன் கேட்பதாயில்லை.உயிருக்கே ஆபத்தான வழியில், கையில் ஊன்றுகோலும், ஏழு ரொட்டித் துண்டுகளுடனும் தனது பயணத்தை தொடங்குகிறான்.நீண்டதூர பயணத்திற்கு பிறகு, சிங்கத்தோலை மட்டுமே உடுத்தியிருக்கும் ஓர் ஆட்டிடையனிடம் தனது ஏழு ரொட்டித்துண்டுகளையும் இழக்கிறான்.அதற்கு இடையன் அவனிடம் தரும் விளக்கம் ஒரு அற்புதம்

‘வழியில்லாத வழியில் போகும் வழிப்போக்கனுக்கு வழி உணவு கூடாது’.

பசியினூடே தொடர்ந்து மேலே செல்கிறான்.ஓர் இடத்தில் தனது ஆடைகளை ஒரு கிழவியிடம் இழந்து நிர்வாணமாக குளிரில் நடுங்கிக்கொண்டே நிற்கிறான்.கிழவி அதற்கான காரணத்தை சொல்கிறாள்.

‘குறைந்த சொத்துடைமை கொண்டவன்
-குறைந்த அளவே, சொத்தினால் உடைமை
கொள்ளப்படுவான்’

பிறகு கடைசியாக தன்னிடம் இருக்கும் ஊன்றுகோலையும் இழக்கிறான்.அதற்கு அவன் பெறும் பதில்...

‘ஊன்றுகோல் இல்லாதவர்கள் மகிழ்ச்சிகொண்டவர்கள்
அவர்கள் தடுமாறுவதில்லை.
வீடட்றவர்கள் மகிழ்ச்சி கொண்டவர்கள்,
அவர்கள் வீட்டில்தான் இருக்கிறார்கள்’

ஊன்றுகோலை எடுத்துக்கொண்டாலும் பரவாயில்லை, இன்னும் தான் எவ்வளவு உயரம் செல்ல வேண்டுமென்பதையாவது கூறுமாறு கெஞ்சுகிறான்.

’உண்மையான உயரம்
எப்போதும் தாழ்வானது
உண்மையான வேகம்
எப்போதும் மெதுவானது.
மிகவும் உணர்ச்சியுள்ளது,
மரத்துப் போனது.
பெரிய பேச்சாளன், ஊமை.
ஏற்ற வற்றம், ஒரே அலையில்தான்.
வழியில்லாதவனே, சரியான வழிகாட்டி.
மிகப் பெரியதென்பது,
மிகச் சிறியதுதான்.
எல்லாம் கொடுப்பவனே,
எல்லாம் பெற்றவன்.’

என்று சொல்லி இறுதியில்,

‘வாழ்வதற்காக செத்துப்போ
சாவதற்காக வாழ்ந்திரு’

இவ்வாறு கூறிவிட்டு மறைந்து போகிறார்கள்.இறுதியில் அனைத்தையும் இழந்தவனாய் மேலே செல்ல யத்தனிக்கும் அவன், தன் கால்கள் தடுமாறி இருளில் எங்கோ தூக்கி எறியப்படுகிறான்.மீண்டும் அவன் கண்விழிக்கும் போது அங்கே அந்தத் துறவி அவனை வரவேற்கிறார்.அவன் லட்சியத்தை அடைந்துவிட்டதாக கூறுகிறார்.நூற்றைம்பது ஆண்டுகளாக அவனுக்காக காத்திருந்ததாக கூறுகிறார்.மிர்தாதின் புத்தகத்தை அவனிடம் தந்துவிட்டு கல்லாக மாறிவிடுகிறார்.அந்தத் துறவியின் பெயர் சமாதம்.

ஆத்ம பயணத்தை பற்றிய, இப்படி ஓர் அற்புதமான உருவகக் கதையோடு ஆரம்பிக்கிறது புத்தகம்.ஒரு வேளை இந்தக் கதையே உங்களுக்குப் புரியாவிட்டால் புத்தகத்தை வாங்காதீர்கள்.உள்ளே முழுக்க முழுக்க இதைவிட சிக்கலான விஷயங்கள் ஒன்றோடொன்று, பிணைந்து பிரிக்கமுடியாதபடி சென்று கொண்டேயிருக்கும்.எல்லாமே உருவகம்தான்.எதிலுமே நேரிடையான விஷயங்கள் இருக்காது.ஆனால் புரிந்துகொண்டால், அதி அற்புதமான பயணம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.புத்தகம் முழுக்க சிக்கலான வாழ்வியல் விஷயங்களை, மிர்தாத் அழகாக இரண்டே வரிகளில் சொல்லிக்கொண்டே போகிறார்.

எனக்கு மிகவும் பிடித்த வரிகள் கீழே :

’எந்த வாளாலும் காயப்படுத்த முடியாத
காற்றைப் போல் திகழுங்கள்’

'ஓ துறவிகளே, மிர்தாத் உங்கள் பிளவுண்ட நானை ஒன்று சேர்ப்பான்’

’மனிதகுலம் ஒட்டுமொத்தமாக ஒரே மனிதன் தான்’

’கடவுளுக்கு எதையும் நினைவுப்படுத்த வேண்டியதில்லை
தலைசிறந்த வலையை ஒரு சிலந்தி பின்னச்செய்ய, அவருக்கு
நினைவூட்ட வேண்டுமா என்ன?’

’ஏக்கம் கொள்கிறவர்கள், மகிழ்ச்சி நிறைந்தவர்கள்’

’ஒரு வீடு, மின்னலைத் தன் பக்கம் ஈர்க்காமல், இடி
அதன் மேல் விழுவதில்லை.இடி விழுவதற்கும், தனது அழிவிற்கும்,
அந்த வீடும் அதிகமான காரணமாகிவிடுகிறது’

’காலம் மறப்பதில்லை.சரியான தருணத்தில் சரியான முகவரியில்
அது அழைப்பை விநியோகிக்கவே செய்கிறது’

’எல்லாவற்றிலும் உமது விருப்பம் இருப்பதையும், அவற்றின் விருப்பங்கள்
உமக்குள் இருப்பதையும், நீங்கள் உணர்ந்திருக்கும் வரை, வல்லமை கொண்ட விருப்பத்தின் இரகசியங்களை உங்களால் அறிய முடியாது’

பணிவிடைகளால் பணிவிடை செய்தே ஆகவேண்டும்
மென்றால், எதுவுமே பணிவிடையைக் காப்பாற்றாது.
பணிவிடை செய்கிறவனுக்குப் பணிவிடை செய்தா
லொழிய, எதற்குமே பணிவிடை செய்துவிட முடியாது’

[Nothing can serve save it be served by serving.
And nothing can be served except it serve the saving.]

ஆங்கிலத்தில் முதலில் வாங்கிப் படித்து தலை சுற்றி, பிறகு தேடிப்பிடித்து தமிழில் வாங்கிப் படித்தேன்.இருந்தாலும் கொஞ்சமாக சுற்றத்தான் செய்கிறது.கவிஞர் புவியரசு எப்படித்தான் இந்தப் புத்தகத்தை மொழிபெயர்த்தாரோ... அற்புதமாக செய்திருக்கிறார்.

இந்தப் புத்தகத்திலேயே எனக்குப் பிடித்தது 21வது பகுதி ‘வல்லமை படைத்த புனித விருப்பம்’.எத்தனை முறை வேண்டுமானாலும் திரும்பத் திரும்ப படிக்கலாம்.வாழ்வின் அத்தனை இரகசியங்களும் அதில் பொதிந்திருக்கிறது.மிகைல் நைமி இறுதியாக இப்படி முடிக்கிறார்...

உலகிற்கு வெளிப்படுத்தலாம் என்று
எனக்கு அனுமதிக்கப்பட்ட 
புத்தகத்தின் பகுதி இத்தோடு முடிகிறது.....
மிச்சத்திற்கான காலம் 
இன்னும் வரவிலை!

7 comments:

  1. wonderful book. where can we the Tamil version of the book.

    A.Victor

    ReplyDelete
  2. it is available in kannadhasan pathippagam..;kannathasan Salai;T.Nagar;chennai 17.

    ReplyDelete
  3. I will buy this book soon...iam told by OSHO he loved this Book as no one...so i will buy it soon

    ReplyDelete
  4. We should thank Puviyarasu sir for the wonderful translation.

    ReplyDelete
  5. இருட்டில் இருந்தவனுக்கு விளக்கொளி கண்டது போல் கண்டேன் ஐயா இந்த ஞான வழி காட்டி நூலை.

    ReplyDelete
  6. can anybody explain the meaning of above said first story and the guys philosophy clearly to understand a common man?

    ReplyDelete
  7. நான் தேடிவந்த சாவியை,
    என்னைத் தேடிவந்து தந்த புத்தகம்!

    பாலமலை சிகரம் நோக்கி சுட்டிக்காட்டிய புவியரசு அய்யாவின் சுட்டுவிரலை முத்தமிட்டான்...

    *பயணம் தொடங்கிய -த.தேன்ராஜன் என்ற தற்காலிக பெயர் கொண்ட "நான்"!

    ReplyDelete